107.
நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'.
108.
மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின் என்பாரே- நறுநெய்யுள்
கட்டி அடையைக் களைவித்துக் 'கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர்'. 108
109.
கண்ணில கயவர் கருத்துணர்ந்து கைமிக
நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல்
எண்ணி இடர்வரும் என்னார் 'புலிமுகத்து
உண்ணி பறித்து விடல்'.
110.
திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார்
வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ ?
அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும்
'பொருந்தாமண் ஆகா சுவர்'.
111.
குலத்துச் சிறியார் கலாந்தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து
நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் 'வெண்மாத்
தலைக்கீழாக் காதி விடல்'.
112.
சொல்எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க்
கல்எறிந்தாற் போலத் கலாந்தலைக் கொள்வாரை
இல்இருந்(து) ஆற்ற முனிவித்தல் 'உள்ளிருந்து
அச்சாணி தாம்கழிக்கு மாறு'.
113.
நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மக்களைப் பேணி
ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்
'புழுப்பெய்து புண்பொதியு மாறு'.
114.
பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் !
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
'நுணலும்தன் வாயால் கெடும்'.
115.
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்குரைத்துப்
போக்குற்ற போழ்தில் புறனழீஇ மேன்மைக்கண்
நோக்கற் றவரைப் பழித்தலென்? என்னானும்
'மூக்கற்ற தற்கில் பழி'.
116.
கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவா லடக்கல் அரிதாகும் - நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப ! 'வாங்கி
வளிதோட் கிடுவாரோ இல்'.
117.
தெரியாதார் சொல்லும் திறனின்மை தீதாப்
பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொல்
கொள்ளாது தாம்தம்மைக் காவா தவர் 'பிறரைக்
கள்ளராச் செய்குறு வார்'.
118.
செய்த கொடுமை உடையான் அதன்பயம்
எய்த உரையான் இடரினால் - எய்தி
மரிசாதி யாயிருந்த 'மன்றஞ்சு வார்க்குப்
பரிகாரம் யாதொன்றும் இல்'.
119.
முதுமக்கள் அன்றி முனிதக்கா ராய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் - அதுமன்னும்
குன்றத்து வீழும் கொடியருவி நன்னாட!
'மன்றத்து மையல்சேர்ந் தற்று'.
120.
தருக்கி ஒழுகித் தகவல்ல செய்தும்
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்
கரப்புடை உள்ளம் கனற்று பவரே
'செருப்பிடைப் பட்ட பரல்'.
121.
உறுமக்க ளாக ஒருவரை நாட்டிப்
பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே யொழிதல்
சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை அதுவே
'குறுமக்கள் காவு நடல்'.
122.
உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
'சுரையாழ அம்மி மிதப்பு'.
123.
தேர்ந்துகண் ஓடாது தீவினையும் அஞ்சலராய்ச்
சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த
விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்
'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு?'

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework