ஈகை
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- பழமொழி நானூறு
372.
சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
பெரிய பொருள்கருது வாரே - விரிபூ
விராஅம் புனலூர ! வேண்(டு)'அயிரை விட்டு
வராஅல் வாங்கு பவர்'.
373.
கரப்புடையார் வைத்த கடையும் உதவா
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால்
நிரப்பிடும்பை மிக்கார்க்கு உதவஒன் றீதல்
'சுரத்திடைப் பெய்த பெயல்'.
374.
பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே
வளநெடிது கொண்ட(து) அறாஅது அறுமோ
'குளநெடிது கொண்டது நீர்?'.
375.
நினைத்த(து) இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார் - புனத்த
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
'கடிஞையில் கல்லிடுவார் இல்'.
376.
கூஉய் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்புத்தான் 'வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும்'.
377.
அடுத்தொன்(று) இரந்தார்க்கொன்று ஈந்தாரைக் கொண்டார்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய் ! யாவர்க்கே யாயினும்
'கொடுத்தேழை யாயினர் இல்'.
378.
இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற்
துறைக்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
'இறைத்தோறும் ஊறும் கிணறு'.
379.
இரவலர் தம்வரிசை என்பார் மடவார்
கரவலராய்க் கைவண்ணம் பூண்ட - புரவலர்
சீர்வரைய ஆகுமாம் செய்கை சிறந்தனைத்தும்
'நீ்வரைய வாநீர் மலர்'.
380.
தொடுத்த பெரும்புலவன் சொற்குறை தீர
அடுத்தர என்றாற்று வாழியரோ என்றான்
தொடுத்தின்னார் என்னலோ வேண்டா 'கொடுப்பவர்
தாமறிவார் தஞ்சீர் அளவு'.
381
மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
'ஒன்றுறா முன்றிலோ இல்'.
382.
ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை - மாற்றாரை
மண்ணசுற்றிக் கொள்நிற்கும் ஆற்றலார்க்(கு) என்னரிதாம்
'பெண்பெற்றான் அஞ்சான் இழவு'.
383.
பயன்நோக்கா(து) ஆற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
'கூலிக்குச் செய்துண்ணு மாறு'.
384.
மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் - பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
'இரந்தூட்குப் பன்மையோ தீது'.
385.
தோற்றம் பெரிய நசையினார் அந்நசை
ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள்
கயற்புரை உண்கண் கனங்குழாய் ! அஃதால்
'உயவுநெய் யுட்குளிக்கும் ஆறு'.
386.
காப்பிகந்(து) ஓடிக் கழிபெருஞ் செல்வத்தைக்
கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திராதென் செய்வர்?
நீத்தப் பெரியார்க்கே யாயினும் 'மிக்கவை
மேவிற் பரிகாரம் இல்'.