142.
பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர்மூழை யாலே உணர்ந்தாங்கு - யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும்
'கண்டது காரணம்ஆ மாறு.'
143.
யாம்தீய செய்த மலைமறைந்த(து) என்றெண்ணித்
தாம்தீயார் தம்தீமை தேற்றாராய் - ஆம்பல்
மணவில் கமழும் மலிதிரைச் சேர்ப்ப!
'கணையினுந் கூரியவாம் கண்'.
144.
வெள்ளம் வருங்கால் ஈரம்பட்(டு) அஃதேபோல்
கள்ளம் உடையாருக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய்! ஒளிப்பினும் 'உள்ளம்
படர்ந்ததே கூறும் முகம்'.
145.
நோக்கி அறிகல்லாத் தம்உறுப்புக் கண்ணாடி
நோக்கி அறிய அதுவேபோல் - நோக்கி
முகனறிவார் முன்னம் அறிய அதுவே
'மகனறிவு தந்தை அறிவு'.
146.
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறமரிதால் தேமொழி ! - யாரும்
குலக்குல வண்ணத்த ராகுப ஆங்கே
'புலப்பல வண்ணத்த புள்'.
147.
காப்பான் மடமகள் காப்பான்கைப் பட்டிருந்தும்
மேய்ப்பாட்ட தென்றுண்ணா ளாயினாள் - தீப்புகைபோல்
மஞ்சாடு வெற்ப ! 'மறைப்பினும் ஆகாதே
தஞ்சாதி மிக்கு விடும்'.
148.
முயலலோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் ! கரியரோ வேண்டா
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework