நாட்டு வணக்கம்
- விவரங்கள்
- சி. சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- தேசிய கீதங்கள்
ராகம் - காம்போதி தாளம் - ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?