பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்தப் பரமன் ஞான
ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
விண்ணவர்த முலகை யாள்ப்ர-
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
அஞ்சியறந் தவிர்க்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்
டிற்கடிமை பூண்டு வாழ்வோன்

வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்fத்தமன வீரமுடன் யுகாந்திரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்

மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய்
திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழோதி
வாழ்த்திமனங் களிக்கின் றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
சிலருலகில் இருப்ப ரன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருளினது விரும்பல் போன்றே!

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்
டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
ஓருயிரென் றுணர்ந்த ஞானி.
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
பெருமையெதும் அறிகி லாதார்,
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework