கண்ணிகள்

நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே?

வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ?

ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ?

அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ

வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே?

ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு.

சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு.

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்குந் தாய்நாடு.

நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு.

கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு.

கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு.

ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.

வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம்.

சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு.

ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு.

என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ?

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ?

என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயர்களிலென் பேருமறந் திட்டாரோ?

தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன்.

எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework