கண்ணன் - என் தாய்
- விவரங்கள்
- சி.சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- கண்ணன் பாட்டு
(நொண்டிச் சிந்து)
உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். ... 1
இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2
விந்தைவிந்தை யாக எனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தையா மேகம் - பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. ... 3
வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். ... 4
நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். ... 5
சோலைகள் காவினங் கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ... 6
தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். ... 7
இறகுடைப் பறவைக ளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ... 8
சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; ... 9
வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். ... 10