வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட
03-010
மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
'தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய்' என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
'குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்
03-020
அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்
03-030
ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி
03-040
நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்
03-050
"கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்" என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
03-060
பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
03-070
ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
"ஈங்கு இதன் காரணம் என்னை?" என்றியேல்
"சிந்தை இன்றியும் செய் வினை உறும்" எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
"செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது" என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்
03-080
செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
'மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல்' என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்
03-090
மண்ணா மேனியன் வருவோன் தன்னை
'வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்
03-100
கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
'உண்ம்' என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்
03-110
தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை
03-120
அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
03-130
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர
03-140
தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
'ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ' என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
'அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்
03-150
மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல'
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
03-160
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்
03-171
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework