சிமைய குரல சாந்துஅருந்தி இருளி
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- அகநானூறு
சிமைய குரல சாந்துஅருந்தி இருளிஇமையக் கானம் நாறும் கூந்தல்
நந்நுதல் அரிவை! இன்னுறல் ஆகம்
பருகு வன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்- 5
கடற்றடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடமை ஊறல் உண்ட
பாடின் தெண்மணி பயங்கெழு பெருநிரை
வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத்து அகற்றி
ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப் 10
பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல்கோள் நெல்லிப் பைங்கால் அருந்தி
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் 15
காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல்
வேய்கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலைஇறந் தோரே. .399-