இறைவன் உயிர்க்குலதிற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும்.

தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன.

அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம், தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வாழ்க்கைப் போக்கை வளர்ப்பதற்கே பகுத்தறிவு. அணு ஆயுதங்களால் உலகை அழிப்பது எங்கனம் பகுத்தறிவு ஆகும்?

இன்று இயற்கை உலகம் விரிந்து கிடக்கிறது. மனிதன் படைத்துள்ள கருவிகள், விரிந்த உலகை இணைக்கின்றன. ஆனால் மனிதன் சுருங்குகிறான். தன் வீடு, தன் நாடு, தன் மொழி, தன் மதம் என்று சுருங்கி விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும். வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும். இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும். ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும். ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்க்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரோளியால் சுடப்பட்டு இறந்து போகிறது; அழிந்து போகிறது. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ள மனிதன்! அதிலும் முதுகெலும்பு உள்ள மனிதன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்"

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework