மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: கட்டுரைகள்
- வாழ்க்கை நலம்
மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவது போல் காட்டி சால ஆக்கம் தரும்.
மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு – நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண்பட்டது.
இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பை, கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுகள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை – பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பை திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.
இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத்தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் ‘விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.
இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி – கலை வழிபட்ட உறவுகளும் வளரும். தொழில், பொருள் வழிபட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத்துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.
மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.
விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.
அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதியில்லை அல்லது காலம் கிடைக்கவில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்
"வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்"
என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.