மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று,பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி, முயன்றவர் இறுதிக் கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல்,
பல் மலர் சினை உகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்;
விரி காஞ்சித் தாது ஆடி இரும் குயில் விளிப்பவும்,
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும் ஆயின், எவன் செய்கோ?
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின், எவன் செய்கோ?
தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம்போல் புல் என்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின், எவன் செய்கோ?
என ஆங்கு,
நின் உள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம்
எண்ணிய நாள் வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்தாங்கே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework