வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல்,மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
இருள் தூங்கு சோலை, இலங்கு நீர் வெற்ப!
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில் மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப்,
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்.
நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை - வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை;
அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும், அடுப்பல் -
வழை வளர் சாரல் வருடை நல் மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework