துனையுநர் விழைதக்க சிறப்புp போல் கண்டார்க்கு
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
துனையுநர் விழைதக்க சிறப்புp போல் கண்டார்க்குநனவின்உள் உதவாது நள் இருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி
உயிர்க்கும்; உசாஅம்! உலம்வரும்; ஓவாள்,
கயல் புரை உண் கண் அரிப்ப அரி வாரப்,
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி அழூஉம்; அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம்; மருளும்;
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது,
காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
ஊழ் செய்து, இரவும் பகலும் போல், வேறு ஆகி,
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்;
தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி -
வறந்து என்னை செய்தியோ, வானம்? - சிறந்த என்
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூ குழீஇ முகந்து?
நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண் பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லா கதிரும் பரப்பிப் பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன் .
ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலை நாள்,
போதரின் - காண்குவேன் மன்னோ - பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்?
இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி,
ஒள் வளை ஓடத் துறந்து; துயர் செய்த
கள்வன் பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி -
பெரும் கடல் புல்லெனக் கானல் புலம்ப,
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்,
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல்? - துஞ்சாது
வானும் நிலனும் திசையும் துழாவும் என்
ஆனா படர் மிக்க நெஞ்சு.
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என்
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ -
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர், மருந்து
வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண் உள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு.
கனை இருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ.
எனப் பாடி,
நோய் உடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி,
"யாவிரும் எம் கேள்வன் காணீரோ?" என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம் போல, எய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப் போல் அவள் சேர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆய் இழை உற்ற துயர்.