கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே,
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே,பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது
மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை
பூ அல்ல; பூளை, உழிந்ஞையோடு யாத்த
புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி,
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி,
நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு, அனைய
வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம்
இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்,
அன்னேன் ஒருவனேன், யான்;
என்னானும், பாடு எனில் பாடவும் வல்லேன், சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ -
என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக,
நல் நுதல் ஈத்த இம் மா?
திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும்,
தம் காதல் காட்டுவர் சான்றவர் - இன் சாயல்
ஒண் தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும், கண்ணோடாது, இவ் ஊர்.
தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப் படில் உய்யும்ஆம் - பூம் கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம்
உணர்ந்தும் உணராது இவ் ஊர்.
வெம் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார்
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டுஆம் - அம் சீர்ச்
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இக் காமம்
அறிந்தும், அறியாது, இவ் ஊர்.
ஆங்க,
என் கண் இடும்பை அறீஇயினென்; நும் கண்
தெருளுற நோக்கித் தெரியும்கால், இன்ன
மருளுறு நோயொடு மம்மர் அகல,
இருளுறு கூந்தலாள் என்னை
அருளுறச் செயின், நுமக்கு அறனும்ஆர் அதுவே.