தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால்பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய,
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர:
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை -
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! -
'தூ அற துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக்
காதல் செய்து அகன்றாரை உடையையோ? - நீ.
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! -
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? - நீ.
பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்! -
'இனி வரின், உயரும் மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? - நீ
என ஆங்கு;
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.