கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- கலித்தொகை
கண் அகல் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்றதண் நறு பிடவமும், தவழ் கொடித் தளவமும்,
வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும்,
அன்னவை பிறவும், பல் மலர் துதையத்
தழையும் கோதையும் இழையும் என்று இவை
தைஇயினர், மகிழ்ந்து திளைஇ விளையாடும்
மட மொழி ஆயத்தவருள் இவள் யார்- உடம்போடு
என் உயிர் புக்கவள், இன்று?
ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர்' என்று கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்.
'சொல்லுக, பாணியேம்' என்றார்; 'அறைக' என்றார்; பாரித்தார்.
மாண் இழை ஆறு ஆகச் சாறு.
சாற்றுள், பெடை அன்னார் கண் பூத்து, நோக்கும் வாய் எல்லாம்
மிடை பெறின், நேராத் தகைத்து.
தகை வகை மிசை மிசைப் பாயியர் ஆர்த்து, உடன்
எதிர் எதிர் சென்றார் பலர்.
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்.
அவருள், மலர்மலி புகல்எழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடைத் தோன்றினன், தோன்றி,
வருத்தினான் மன்ற, அவ் ஏறு.
ஏறு எவ்வம் காணா எழுந்தார்- எவன் கொலோ-
ஏறு உடை நல்லார்; பகை?
மடவரே நல் ஆயர் மக்கள்- நெருநை,
அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும், மற்று இன்றும்,
உடல் ஏறு கோள் சாற்றுவார்!
ஆங்கு இனித்;
தண்ணுமைப் பாணி தளராது எழூஉக-
பண் அமை இன் சீர் குரவையுள், தெள் கண்ணித்
திண் தோள், திறல் ஒளி, மாயப் போர், மா மேனி,
அம் துவர் ஆடைப் பொதுவனோடு, ஆய்ந்த
முறுவலாள் மென் தோள் பாராட்டிச், சிறுகுடி
மன்றம் பரந்தது, உரை!