அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண்பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இரும் கூந்தல்,
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சில நிரை வால் வளைச் செய்யாயோ! எனப்,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே;
'பொருள் அல்லால் பொருளும் உண்டோ?' என, யாழ நின்
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு?' என,
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ?
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ?
அதனால்,
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கைவிடப் பெறும் பொருள் திறத்து
அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework