திருக்குறள் ஓர் அறிவியல் நூல்; உளவியலைச் சார்ந்த அறிவியல் நூல். நெருப்பை அள்ளி அடுத்தவர் வீட்டின்மீது கொட்டினால் கை சுடாமலா போகும்? அது போல் நாம் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தால் நாம் கெடாமலேயா மற்றவர்களுக்குக் கொடுமை செய்ய முடியும்? அல்லது இயலும்?

நமது சிந்தனையும் அறிவும் உணர்வும் புலன்களும் கெட்ட பிறகுதான் மற்றவர்களுக்குக் கேடு செய்ய முடியும். ஆதலால், யார் ஒருவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நமக்குத் தீங்கு செய்தாருக்குங்க்கூட நாம் திரும்பச் செய்யக் கூடாது. இப்படித் தீமைக்குத் தீமை என்னும் சித்தாந்தம் தீமை தொடர் வரலாறாகிவிடும்; தலைமுறைத் தலைமுறைக்குத் தீமை தொடரும், இது விரும்பத் தக்கதன்று.

எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்தாற்றும் பண்பே விரும்பத்தக்கது. அது மட்டும் அல்ல. பொறுத்துப் போதல் எளிமையானது. பொறுத்துப் போதல் ஆக்கத்திற்குத் துணை செய்யும்; அமைதிக்குத் துணை செய்யும். அதற்கு மாறாகச் செய்யும் பழிவாங்கும் முயற்சி கடினமானது; அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டிவரும்; இன்பமும் அமைதியும் குலையும்.

பழிவாங்கும் மனப்போக்கில் பழி பாவங்களுக்குரிய அச்சம் இருக்காது. ஏன் அறிவேகூட வேலை செய்யாது. ஆத்திரம் மட்டுமே வேலை செய்யும்; புத்தி முடங்கிப் போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம், சட்டங்களின் (அறத்தின் - அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்கு கூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவகமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள். "நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நம்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக" என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.
பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை – அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந்தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தணிக்கும் பணியே.

எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொணாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்துவதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல் முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு.

முதலில் கெட்டவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்; திருந்துவார்கள். வாழ்க்கையும் பயனுடையதாகும்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (திருக்குறள் – 314) என்ற திருக்குறளை நோக்குக. இந்தத் திருக்குறளில் "ஒறுத்தல்" "அவர்நாண" என்ற சொற்கள் உடன்பாட்டுச் சொற்கள். இந்தச் சொற்களைக் கையாள்வதன் மூலம் பழிவாங்கும் உச்சாணிக் கொம்பிலிருப்பவன் இறங்கி வருவான்.

அவனுடைய சினம் தணியும் . பழிவாங்கும் மனப்போக்கிலும் மறு ஆய்வு தலைகாட்டும். இந்த இதமான – இங்கிதமான சூழ்நிலையில் அவனுக்கு ஒரு நன்மை செய்தால் மகிழ்வான்; மாறுவான்; என்றும் நல்லவனாக இருப்பான்.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework