அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.

பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க. கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி, கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப் படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு – பகுத்தறிவே இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.

அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. "மேலான சக்தி" களை நம்புவதில் பயனில்லை.

அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.

இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த, அறிவுக்குப் பெயர் நுண்ணறிவு. நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework