தகுதியும் அதுவே!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- புறநானூறு
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக்
கவனிக்க.)
கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்;
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?
மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,
அவல மறுசுழி மறுகலின்,
தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே.