அடைத்த கதவினை!
- விவரங்கள்
- பல ஆசிரியர்கள்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- புறநானூறு
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ. திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.
அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப்
புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும்
கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.)
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.