ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் 5
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் 10
ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள 15
நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் 20
நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம்
கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்பச் 25
சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன்
தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன் 30
விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு 35
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்
வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம் 40
தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன் 45
பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச்
சாலி அயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில் 50
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி 55
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன 60
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி 65
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடொளிப் 70
பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக்
கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு 75
நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி
வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப்
பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் 80
சூழொளித் தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் 85
கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் 90
காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் 95
செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக் 100
கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக்
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின் 105
யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் 110
உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக்
கறவையும் கன்றும் கனலெரி சேரா 115
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் 120
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம் பரிந்தன பரந்த 125
தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக்
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்
திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு
பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி 130
வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத
வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை 135
கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் 140
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145
ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் 150
காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 155
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்.

வெண்பா


மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் 160
மதுரா பதியென்னு மாது.

[இக்காதையின் பாடல் வரிகள்
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework