387.
எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
மன்னர் உடைய உடைமையும் - மன்னரால்
இன்னர் எனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
'தம்மை உடைமை தலை.'
388.
அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே
'கொல்லிமேல் கொட்டு வைத்தார்'.
389.
நட்டாரை யாக்கிப் பகைதணித்து வையெயிற்றுப்
பட்டார் துடியிடை யார்ப்படர்ந்(து) - ஒட்டித்
தொடங்கினார் இல்லத்த தன்பின் 'துறவா
உடம்பினான் என்ன பயன்?'
390.
இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) - எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
'இருதலையும் காக்கழித் தார்'.
391.
வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் 'கூற்றம்
குதித்துய்ந்து அறிவாரோ இல்'.
392.
கொண்டொழுகும் மூன்றற்(கு) உதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி வந்த வளமைத்(து)அங்(கு) - உண்டது
கும்பியினும் திச்சென்(று) அறிதலால் 'தன்னாசை
அம்பாயுள் புக்கு விடும்'.
393.
செல்வத் துணையும்தம் வாழ்நாள் துணையும்தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
'முள்ளித்தேன் உண்ணு மவர்'.
394.
வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை
என்னெஞ்சே ! இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே!
இல்சுட்டி நீயும் இனிதுரைத்துச் சாவாதே
'பல்கட்டப் பெண்டீர் மகார்'.
395.
சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்? -கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட ? அஃதன்றோ
'யானைபோய் வால்போகா வாறு'.
396.
எனைப்பல் பிறப்பினும் ஈண்டித்தாம் கொண்ட
வினைப்பயன் மெய்யுறுதல் அஞ்சி - எனைத்தும்
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே
'குழிப்புழி ஆற்றா குழிக்கு'.
397.
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
'நீரற நீர்ச்சார் வறும்'.
398.
ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்பது அறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட ! பயிலார் 'பயின்றது
வானகம் ஆகி விடும்.
399.
பரந்தவர் கொள்கைமேல் பல்லாறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்தறிந்து கொள்க
வரம்பில் பெருமை தருமே 'பரம்பூரி
என்றும் பதக்கே வரும்'

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework