69.
நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
'தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர்'.
70.
ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி'.
71.
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
'ஈடில் லதற்கில்லை பாடு'.
72.
இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்
உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு
அணிமலை நாட ! 'அளறாடிக் கண்ணும்
மணிமணி யாகி விடும்'.
73.
கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார்
மற்றொன றறிவாரின் மாணமிக நல்லால்
பொற்ப உரைப்பான் புகவேண்டா 'கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்'.
74.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப !
'அறிமடமும் சான்றோர்க்(கு) அணி'.
75.
பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள்ளூன்றப் பல்லா
நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும்
'உரைத்தால் உரைபெறுதல் உண்டு'.
76.
எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குத் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் 'காணார்
எனச்செய்தார் மாணா வினை'.
77.
தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை -ஏய்ப்பார்முன்
சொல்லோ டொருப்படார் சோர்வின்றி மாறுபவே
'வில்லோடு காக்கையே போன்று'.
78.
மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப !
'கடலொடு காட்டொட்டல் இல்'.
79.
நிரைதொடி தாங்கிய நீள்தோள்மாற்(கு) ஏயும்
உரையொழியா வாகும் உயர்ந்தோர்கண் குற்றம்
மரையா கன்றூட்டும் மலைநாட! 'மாயா
நரையான் புறத்திட்ட சூடு'.
80.
கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
'குன்றின்மேல் இட்ட விளக்கு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework