துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: பறைக்குரல் அருவி

களிறுகடைஇய தாள்
மாஉடற்றிய வடிம்பு
சமம்ததைந்த வேல்
கல்அலைத்த தோள்
வில்அலைத்த நல்வலத்து 5
வண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
உடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்
கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்த 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல் 15
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
வேள்வியின் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை 20
இளம்துணைப் புதல்வா஢ன் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
இழும்என இழிதரும் *பறைக்குரல் அருவி*
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா(து) ஆகநீ வாழும் நாளே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework