துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: அருவி ஆம்பல்

பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே
பணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇ
நட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையே 5
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையே
சிறிஇலை உழிஞைத் தொ஢யல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி 10
ஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால் 15
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்
அடைஅடுப்(பு) அறியா *அருவி ஆம்பல்*
ஆயிர வெள்ள ஊழி 20
வாழி யாத வாழிய பலவே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework