கீழ்மக்கள் இயல்பு
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- பழமொழி நானூறு
90.
மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய ராயினும் 'என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்'
91.
தக்காரோ(டு) ஒன்றித் தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரைத் தாம்சேறார்
கொக்கார் வளவய லூரா! 'தினலாமோ
அக்காரம் சேர்ந்த மணல்'.
92.
தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! 'ஆகுமோ
நந்துழுத எல்லாம் கணக்கு?'.
93.
பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமம் நனியுளர் - பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
'உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு'.
94.
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! - மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும் 'ஆகாதே
உண்டது நீலம் பிறிது'.
95.
தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே யாயினும் நன்கொழுகார் 'கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு'.
96.
காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் 'குறும்பூழ்க்குச்
செய்யுள(து) ஆகும் மனம்'.
97.
கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்(று) 'அஞ்சாதே
தின்பது அழுவதன் கண்'.
98.
மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத்
தக்கது அறியார் தலைசிறத்தல் - எக்கர்
அடும்(பு)அலரும் சேரப்ப! 'அகலுள்நீ ராலே
துடும்பல் எறிந்து விடல்'.
99.
மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார்
பேணா துரைக்கும் உரைகேட்டு வந்ததுபோல்
ஊணார்ந்(து) உதவுவதொன்று இல்லெனினும் 'கள்ளினைக்
காணாக் களிக்கும் களி'.
100.
உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப!
'முழங்குறைப்ப சாண்நீளு மாறு'.
101.
அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச்சி தைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் 'நரியிற்(கு) ஊண்
நல்யாண்டும் தீயாண்டும் இல்'.
102.
கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது
காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்
பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?
'ஊரறியா மூரியோ இல்'.
103.
நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம்
பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார்
மரம்பயில் சோலை மலைநாட! என்றும்
'குரங்கினுள் நன்முகத்த இல்'.
104.
ஊழாயி னாரைக் களைந்திட்(டு) உதவாத
கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும்
தீஞ்சொல் மழலையாய் ! தேனார் 'பலாக்குறைத்துக்
காஞ்சிரை நட்டு விடல்'.
105.
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர ! அதுவன்றோ
'நாய்மேல் தவிசிடு மாறு'.
106.
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து
ஆசறு செய்யாராய் ஆற்றப் பெருகினும்
மாசற மாண்ட மனமுடையர் ஆகாத
'கூதறைகள் ஆகார் குடி.'