43.
பூவுட்கும் கண்ணாய் ! பொறுப்பர் எனக்கருதி
யாவர்க்கே யாயினும் இன்னா செயல்வேண்டா
தேவர்க்கும் கைகூடத் திண்ணன்பி னார்க்கேயும்
'நோவச்செய் நோயின்மை இல்'.
44.
வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனம்பொன் அவிர்சுணங்கி பூங்கொம்பர் அன்னாய்!
'தனக்கின்னா இன்ன பிறர்க்கு'.
45.
ஆற்றார் இவரென்(று) அடைந்த தமரையும்
தோற்றத்தாம் எள்ளி நலியற்க - போற்றான்
'கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கவ்வி விடும்.
46.
நெடியது காண்கிலாய் நீயொளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
'முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்'.
47.
தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
'ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்'
48.
மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேல்
'கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்'.
49.
நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தந்நலியின்
கூர்த்தவரைத் தாம்நலிதல் கோளன்றால் - சான்றவர்க்குப்
பார்த்தோடிச் சென்று கதம்பட்டு 'நாய்கவ்வின்
பேர்த்துநாய் கவ்வினார் இல்'.
50.
காழார மார்ப! கசடறக் கைகாவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர்
உள்ளத்துக் கொண்டுநேர்ந்(து) ஊக்கல் 'குறுநரிக்கு
நல்லாநா ராயம் கொளல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework