1.
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
'சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்'.
2.
சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றொன்று அறியுமேல்
'கற்றொறுந்தான் கல்லாத வாறு'.
3.
விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட ! என்னை
'பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்'.
4.
ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
'ஆற்றுணா வேண்டுவ தில்'.
5.
உணற்கினிய இன்னீர் பிறிதுழி இல்லென்றும்
கிணற்றுகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
'கற்றலின் கேட்டலே நன்று'.
6.
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்'.
7.
புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே
'பாம்பறியும் பாம்பின கால்'.
8.
நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்ப! மற்றென்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.
9.
சுற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.
10.
விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை இல்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
'மதிப்புறத்துப் பட்ட மறு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework