31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் பறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பரே மேலைத்
தவத்தால் தவம்செய்யா தார்.

32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை.

33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.

34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பா஢வ திலர்.

36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

37. மக்களா லாய பொரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புராவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
Go to top