மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்கை புனை முக் காழ் கயம் தலைத் தாழப்,
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒள் பூண் நனைத்தரும் அவ் வாய்
கலந்து கண் நோக்கு ஆரக், காண்பு இன் துகிர் மேல் 86-5
பொலம் புனை செம் பாகம் போர் கொண்டு இமைப்பக்,
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்,
தொடியோர் மணலின் உழக்கி, அடி ஆர்ந்த
தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப, இயலும் என்
போர் யானை, வந்தீக, ஈங்கு;
செம்மால்! வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி; பெரும! - மற்று ஒவ்வாதி,
'ஒன்றினேம் யாம்' என்று உணர்ந்தாரை, நுந்தை போல்,
மென் தோள் நெகிழ விடல்;
பால் கொளல் இன்றிப், பகல் போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி, பெரும! - மற்று ஒவ்வாதி
கால் பொரு பூவின் கவின் வாட, நுந்தை போல்,
சால்பு ஆய்ந்தார் சாய விடல்;
வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர் மெல் நோக்கின் மகளிரை, நுந்தை போல். 86-23
நோய் கூர நோக்காய் விடல்;
ஆங்க,
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்;
மறை நின்று, தாம் மன்ற வந்தீத்தனர்;
'ஆய் இழாய்! தாவாத எனக்குத் தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை, இவனை யாம் கோடற்குச், சீத்தை, யாம்
கன்றி அதனைக் கடியவும், கை நீவிக்,
குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்,
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் - அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework