வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம்நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல்நீர் தலைஇ, உலவைஇலை நீத்துக்
குறுமுறி ஈன்றன, மரனே; நறுமலர் 5
வேய்ந்தன போலத் தோன்றிப், பலஉடன்
தேம்படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனிநன்று ஆகிய பனிநீங்கு வழிநாள்,
பால்எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
போதுவந் தன்று, தூதே; நீயும் 10
கலங்கா மனத்தை ஆகி, என்சொல்
நயந்தனை கொண்மோ- நெஞ்சுஅமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும்,
நின்னினும் மடவள் நனிநின் நயந்த 15
அன்னை அல்லல் தாங்கி,நின் ஐயர்
புலிமருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும் தோய்க, நின் முலையே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework