நுதலும் தோளும், திதலை அல்குலும்,வண்ணமும், வனப்பும், வரியும் வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவுநன்று' என்னாது அகலினும், அவர் - வறிது,
ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை, 5
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப,
நெறியயல் திரங்கும் அத்தம்; வெறிகொள,
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில்,
நோன்சிலை மழவர் ஊன்புழுக்கு அயரும்
சுரன்வழக்கு அற்றது என்னாது, உரஞ்சிறந்து, 10
நெய்தல் உருவின் ஐதுஇலங்கு அகல்இலைத்,
தொடைஅமை பீலிப் பொலிந்த கடிகை,
மடைஅமை திண்சுரை, மரக்காழ் வேலொடு
தணிஅமர் அழுவம் தம்மொடு துணைப்பத்,
துணிகுவர் கொல்லோ தாமே - துணிகொள 15
மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டிப்
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல் ஆறே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework