பாடியவர்: கழாத் தலையார்
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
திணை: வாகை துறை: மறக்களவழி
குறிப்பு: இவன், சோழன் வேற்ப·றடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது, களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா
முன்னர், அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள்.

களிறு முகந்து பெயர்குவம் எனினே.
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்,
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி,
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ !
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்,
பாடி வந்த தெல்லாம், கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework