81.
ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு
ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
'ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்'.
82.
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு) அறிவாம்என்(று) எண்ணி இராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! 'சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன்'.
83.
மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண்(டு) அமர்ந்தகண் மாணிழாய்! 'சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்'.
84.
ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா அடைந்தாரை
மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ?
பூண்தாங்கு இளமுலை பொற்றொடி! 'பூண்ட
பறையறையார் போயினார் இல்'.
85.
பரியப் படுபவர் பண்பிலார் ஏனும்
திரியப் பெறுபவோ சான்றோர் - விரிதிரைப்
பாரெறியும் முந்நீர்த் துறைவ ! 'கடனன்றோ
ஊரறிய நட்டார்க்கு உணா'.
86.
தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்
மற்றுங்கண் ஓடுவர் மேன்மக்கள் - தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத் தாயினும் 'சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு'.
87.
இறப்ப எமக்கீ(து) இழிவரலென்(று) எண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
'தால அடைக்கலமே போன்று'.
88.
பெரிய குடிப்பிறத் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
'பூவோடு நாரியைக்கு மாறு'.
89.
சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே -தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய் ! 'மோரின்
முதுநெய் தீதாகலோ இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework