நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப்பெயர் பெற்றது.













கடவுள் வாழ்த்து

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். ..... ..1
---------------
படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன். ..... ..2

எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து. ..... ..3

பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு. ..... ..4

மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன். ..... ..5

கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி. ..... ..6

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும். ..... ..7

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்
கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் மன்னர்ச் செலவு. ..... ..8

கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். ..... ..9

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும். 10

நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம். ..... ..11

கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர
மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி
இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை
நயத்திற் பிணித்து விடல். ..... ..12

கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்
விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கும் சிதைக்கும் வினை. ..... ..13

பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு
கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர் நோய். ..... ..14

பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து
ஆர்தலின்நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று. ..... ..15

வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து. ..... ..16

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். ..... ..17

கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும். ..... ..18

பொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர். ..... ..19

மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல். ..... .. 20

பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும். ..... ..21

மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு. ..... ..22

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின். ..... ..23

புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை - காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு. ..... ..24

மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்
அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடனுறையும் காலமும் இல். ..... ..25

நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும். ..... ..26

அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி
நட்டார்கண் விட்ட வினை. ..... ..27

அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். ..... ..28

கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. ..... ..29

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். ..... ..30

குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு. ..... ..31

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல். ..... ..32

புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்
முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும். ..... ..33

பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத் தவர். ..... ..34

அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்
தாயின் சிறந்த தமரில்லை யாதும்
வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோ டொப்பதூஉம் இல். ..... ..35

இரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய
பெரியரான் எய்தப் படும். ..... ..36

மறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும். ..... ..37

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல். ..... ..38

நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகைஇனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்
பெண்இனிது பேணி வழிபடின் பண்இனிது
பாடல் உணர்வார் அகத்து. ..... ..39

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை செல்சா ருயிர்க்கு. ..... ..40

கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யுந் திரு. ..... ..41

திருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்
கூற்றமுங் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற
மறைக்க மறையாதாங் காமம் முறையும்
இறைவகையான் நின்று விடும். ..... ..42

பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும். ..... ..43

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த
வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்
மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி
மன்னர்சீர் வாடி விடும். ..... ..44

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்
காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க
தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்
முந்துதான் செய்த வினை. ..... ..45

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்
நண்பினார் நண்பு கெடும். ..... ..46

நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்
ஊடல் உணரா ரகத்து. ..... ..47

நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில். ..... ..48

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
தவமிலார் இல்வழி இல்லை தவமும்
அரச னிலாவழி இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழி யில். ..... ..49

போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்
தாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் - தீதில்
வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்
நனையினான் நந்தும் நறா. ..... ..50

சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்
பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்
றில்லென்றல் யார்க்கும் அரிது. ..... ..51

இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்
உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்
தன்னடைந்த சேனை சுடும். ..... ..52

எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருள தறநெறி பன்னூலும்
தேர்தற் பொருள பொருள். ..... ..53

யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்
மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோ டொப்ப உள. ..... ..54

எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;
ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி. ..... ..55

யானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்
கடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு. ..... ..56

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ
டெண்ணக் கடவுளு மில். ..... ..57

கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்
செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென
உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புற்றன்னர் புல்லறிவி னார். ..... ..58

மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்
துறப்பார் துறக்கத் தவர். ..... ..59

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர். ..... ..60

இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்
முனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்
தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன். ..... ..61

ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்
கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியா தானை இரவு. ..... ..62

நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து
வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து
கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து. ..... .. 63

பழியின்மை மக்களால் காண்க வொருவன்
கெழியின்மை கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப் படும். ..... .. 64

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின்
உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி
நாட்டுள்ளும் நல்ல பதியுள பாட்டுள்ளும்
பாடெய்தும் பாட லுள. ..... .. 65

திரியழல் காணில் தொழுப விறகின்
எறியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு. ..... ..66

கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகின் கெடும். ..... ..67

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்
அரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல். ..... ..68

பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை. ..... ..69

கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையா தவர். ..... ..70

மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்
புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும். ..... ..71

பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்தும் குடி. ..... ..72

ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு. ..... ..73

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை யானே நடந்தன - தாழியாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலா லின்புறு வார். ..... ..74

கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யாவித் தாகி விடும். ..... ..75

தேவ ரன்னர் புலவரும் தேவர்
தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாரைக் காத லவர். ..... ..76

தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து. ..... ..77

நாக்கி னறிப இனியதை மூக்கினான்
மோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணினான் எண்ணப் படும். ..... ..78

சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல். ..... ..79

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா. ..... ..80

நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு. ..... ..81

கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல். ..... ..82

நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. ..... ..83

நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்
கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்
துடையார்க்கும் எவ்வூரு மூர். ..... ..84

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள். ..... ..85

நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
ஆடலாற் பாடு பெறும். ..... ..86

ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல். ..... .. 87

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை. ..... ..88

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம். ..... ..89

மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு. ..... ..90

மறையறிய அந்தண் புலவர் முறையொடு
வென்றி அறிப அரசர்கள் - என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண். ..... ..91

பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல் நிற்குங் கொலை. ... 92

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்
கயம்பெருகின் பாவம் பெரிது. ..... ..93

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார் கையகத் தூண். ..... ..94

எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா வளர விடல்தீது - நல்லார்
நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை. ..... ..95

ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல்...... ..96

கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும். ..... ..97

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும். ..... ..98

வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின். ..... ..99

மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும். ..... ..100

எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணெக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை. ..... ..101

ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை. ..... ..102

வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். ..... ..103

ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல். ..... ..104

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு. ..... ..105

இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். ..... .. 106

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework