உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்,
தையல்! நின்வயின் பிரியலம் யாம்' எனப்
பொய்வல் உள்ளமொடு புரிவுஉணக் கூறி,
துணிவில் கொள்கையர் ஆகி, இனியே 5
நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர
நாம்அழத் துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி,
நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி, 10
பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல-
மழைகால் அற்சிரத்து மாலிருள் நீக்கி, 15
நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்;
கடாஅ யானைக் கவுள்மருங்கு உதிர
ஆம்ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலிஉரி வரியதள் கடுப்பக், கலிசிறந்து,
நாட்பூ வேங்கை நறுமலர் உதிர, 20
மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறுநெறிக்
கல்பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework