வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி
பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
நீலத் தன்ன அகல்இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி, 5
பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு,
யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தன்ன,
வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
அலங்குகுலை அலரி தீண்டித், தாது உக, 10
பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக்,
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து
கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின்தோட்
பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும், 15
தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி -
எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' எனக்,
கனவிலும் பிரிவு அறியலனே: அதன்தலை 20
முன்தான் கண்ட ஞான்றினும்
பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework