அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்விளிநிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளா அக்
குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் 5
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,
மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப, 10
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்.
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம் 15
இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி 20
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம் 25
கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework