சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும்பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற
துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி,
ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என்
நெஞ்சு ஆறு கொண்டாள், அதன் கொண்டும் துஞ்சேன்;
அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது,
பாடுவேன், பாய் மா நிறுத்து.
யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப
'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் -
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காமக் கடல் அகப்பட்டு.
உய்யா அரு நோய்க்கு உயவாகும் - மையல்
உறீஇயாள் ஈத்த இம் மா.
காணுநர் எள்ளக் கலங்கித், தலை வந்து, என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் -
'மாண் இழை மாதராள் ஏஎர்' எனக் காமனது
ஆணையால் வந்த படை.
காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் -
எழில் நுதல் ஈத்த இம் மா.
அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும்
வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ -
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!
அழல் மன்ற காம அரு நோய்; நிழல் மன்ற,
நேர் இழை ஈத்த இம் மா.
ஆங்கு அதை,
அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம்
ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர்
உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என்
துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework