கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும்சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இரும் தும்பி இயைபு ஊத,
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின், பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்,
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் -
காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான்,
மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ? - காணாயோ? மட நெஞ்சே!
கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை,
அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ? - புல்லாயோ மட நெஞ்சே!
வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான்,
செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ? - அறியாயோ? மட நெஞ்சே!
என ஆங்கு;
எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ,
இரும் கழி ஓதம் போல் தடுமாறி,
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework