கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப்போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்பக்,
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு, ஏது இன்றிச்,
சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை;
பலவு நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை;
அலவலை உடையை' என்றி - தோழீ !
கேள் இனி;
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
பேணி அவன் சிறிது அளித்தக் கால், என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
அருளி அவன் சிறிது அளித்தக் கால், என்
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்;
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும்,
புல்லி அவன் சிறிது அளித்தக் கால், என்
அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்;
அதனால்;
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த
காம நோயின் கழீஇய நெஞ்சம் -
தான் அவர்பால் பட்டது ஆயின்,
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework