யார் இவன் என்னை விலக்குவான்? நீர் உளர்பூம் தாமரைப் போது தந்த விரவுத் தார்க்
கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு
சொல்லல் ஓம்பு என்றார், எமர்.
எல்லா! 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும்
நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல், ஓம்பு' என்றார், எமர்.
கடாஅயார், நல்லாரைக் காணின், விலக்க, நயந்து, அவர்
பல் இதழ் உண் கண்ணும் தோளும் புகழ் பாட,
நல்லது கற்பித்தார் மன்ற, நுமர். பெரிதும்
வல்லர், எமர் கண் செயல்.
ஓஒ! வழங்காப் பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்,
வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை
இகழ்ந்தாரே அன்றோ, எமர்?
ஒக்கும்; அறிவல் - யான் எல்லா! - விடு.
'விடேன், யான்; என், நீ குறித்தது? - இரும் கூந்தால்!
நின்னை, "என் முன் நின்று
சொல்லல் ஓம்பு" என்றமை அன்றி, "அவனை நீ
புல்லல் ஓம்பு" என்றது உடையரோ? மெல்ல
முயங்கு, நின் முள் எயிறு உண்கும். எவன் கொலோ?
மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின், தலைப்பட்டாம்; பொய் ஆயின்
சாயல் இன் மார்பில், கமழ் தார் குழைத்த நின்
ஆய் இதழ் உண் கண் பசப்பத் தட மென் தோள்
சாயினும் ஏஎர் உடைத்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework