அரி நீர் அவிழ் நீலம் அல்லி, அனிச்சம்,புரி நெகிழ் முல்லை, நறவோடு அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
இன்று நன்று, என்னை அணி;
அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்,
ஐயத்தால்? என்னை கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் - கண்டீ தெளிக்கு;
மற்று அது, அறிவல், யான் நின் சூள்; அனைத்து ஆக நல்லார்
செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார், ஆராக் கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி;
தெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை - காண்பாய், நீ - தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து;
அன்னதேல், ஆற்றல் காண்;
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்
கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே, நின் வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்
பேணாய் நீ பெட்பச் செயல்?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework