கண்டேன் நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர் மன்னோ, ஈங்கு?
ஒண் தொடி! நீ கண்டது எவனோ தவறு?
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கிப்,
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் -
தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா
ஆராக் கவவின் ஒருத்தி வந்து - அல்கல் தன்
சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச், சிவந்து, நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆய் இழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்
நாறு இணப் பைந் தார் பரிந்தது அமையுமோ?
'தேறு நீ; தீயேன் அலேன்' என்று மற்று அவள்
சீறு அடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனிக், காயேமா யாம்;
தேறின், பிறவும் தவறு இலேன் யான்;
அல்கல் கனவு கொல் நீ கண்டது?
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு எனக், காணாது, மாறு உற்றுப் -
பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா! -
நின்றாய், நின் புக்கில் பல;
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில் உண்கு;
ஏடா! குறை உற்று நீ எம் உரையல் - நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework