உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்நறு வடி ஆர் இற்றவை போல் அழியக்,
கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச்,
சுரந்த என் மெல் முலைப் பால் பழுது ஆக - நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான், 'எல்லா!
கடவுள் கடி நகர் தோறும் இவனை
வலம் கொளீஇ வா' எனச், சென்றாய், விலங்கினை
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை? கூறு;
நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட
குடை நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ
'இவன் மன்ற, யான் நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன்' என்று அகல் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று, அவர்
தம் தம் கலங்களுள், 'கையுறை' என்று இவற்கு,
ஒத்தவை ஆராய்ந்து, அணிந்தார்; 'பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வான் ஆம், இ·து ஒத்தன்; சீத்தை!
செறு தக்கான் மன்ற பெரிது';
சிறு பட்டி! ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ? யாம் காண்கு;
அவற்றுள், நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;
குறி அறிந்தேன்; 'காமன் கொடி எழுதி, என்றும்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக் கொண்டு ஆள்வல்' என்பது தன்னை
அறீஇய செய்த வினை;
அன்னையோ? இ·து ஒன்று;
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர்
வெந்த புண் வேல் எறிந்தற்றா, இ·து ஒன்று;
தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக் கண்
தந்தார் யார், எல்லாஅ! இது?
இ·து ஒன்று, என் ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி, தந்தாளா? நின்னை,
இது தொடுக என்றவர் யார்?
அஞ்சாதி; நீயும் தவறு இலை; நின் கை இது தந்த
பூ எழில் உண் கண் அவளும் தவறு இலள்!
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள் -
தான் யாரோ? என்று வினவிய, நோய்ப்பாலேன்
யானே தவறு உடையேன்!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework