பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்குமதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீராப், புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர!
'ஊரன்மன் உரன் அல்லன், நமக்கு' என்ன, உடன் வாளாது,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ -
'கேள் அலன், நமக்கு அவன், குறுகன்மின்' என, மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
'ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர் வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு' என்று எழுந்த சொல் நோவேமோ -
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ -
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம் இல்
'பொலிக' எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்?
என ஆங்கு;
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் -
மனை வரின், பெற்று உவந்து, மற்று எம் தோள் வாட,
'இனையர்' என உணர்ந்தார் என்று ஏக்கற்று, ஆங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே -
ஐய! எமக்கு நின் மார்பு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework