திருந்து இழாய்! கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது; ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெற தைஇ, நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத் -
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத்,
தோழி! நீ போற்றுதி என்றி - அவன் ஆங்கே,
பாராக், குறழாப், பணியாப், 'பொழுது அன்றி
யார் இவண் நின்றீர்?' எனக் கூறிப், பையென
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன்
பக்கு அழித்துக், 'கொண்டீ' எனத் தரலும் - யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்பக் - கடிது அகன்று கைமாறிக்
'கைப்படுக்கப்பட்டாய் சிறுமி! நீ மற்று, யான்
ஏனை பிசாசு, அருள் என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்'
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப -
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடும் கேழ்க், கடுங்கண்
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டற்றால்; காதலன்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெரும் கரும் கூத்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework