வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால்,மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி -
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்பக்
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின் கண் கண் கவர்பு ஒருங்கு ஓட,
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர்
இளமையான் எறி பந்தொடு - இகத்தந்தாய்! கேள் இனி;
பூம் தண் தார்ப் புலர் சாந்தின், தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண் கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்,
சேந்து நீ இனையையால்; ஒத்ததோ? - சின் மொழி!
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்,
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலைப்
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும், நோய் செய்தல் கடப்பு அன்றோ? - கனம் குழாய்!
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்,
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய்!
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் - தக்கதோ? காழ் கொண்ட இள முலை!
என ஆங்கு,
இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி,
நினையுபு, நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே,
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனை ஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework